ஜக்கம்மாள் கரடு
ஜக்கம்மாள் கரடு:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், மாவூற்று வேலப்பர் கோயில் செல்லும் வழியில் சுந்தராஜபுரம் மற்றும் பழையக்கோட்டை ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது ஜக்கம்மாள் கரடு. சஞ்சீவி மலை என்றும் உள்ளூர் மக்கள் இம்மலையை அழைக்கின்றனர். சுமார் 71 ஏக்கர் பரப்பளவும், சுமார் 1050 அடி உயரமும் கொண்டது ஜக்கம்மாள் கரடு. வருவாய்த்துறை ஆவணங்களில் கரடு என இம்மலை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மலையடிவார ஊர்கள்:
ஜக்கம்மாள் கரடு மலையின் மேற்கில் சுந்தராஜபுரம், தெற்கில் இராமகிருஷ்ணாபுரம் - அழகாபுரி, கிழக்கில் புஞ்சைகாடும், வடக்கில் சிவலிங்கம்பட்டி - பழையகோட்டை ஊரும் அமைந்துள்ளது.
மனிதகுல வரலாற்றை வரலாற்றுக்கு முந்திய காலம் (Prehistoric Period); வரலாற்றுக் காலம் (Historic Period) என இருவகையாக பகுக்கின்றனர்.
வரலாற்றுக்கு முந்திய காலம்:
மனிதன் கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல், கருத்து பரிமாற்றதிற்கு எழுத்து வடிவம் தோன்றும் வரை இருந்த காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் என்பர். மனிதர்கள் எழுத்து முறையை அறிந்திராத காலகட்டம் இதுவாகும். இக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய, எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொல்பொருள் ஆய்வுகள், குகை ஓவியங்கள், கற்கருவிகள், எழும்புகள், மண்பாண்டங்கள், மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் மூலமே இக்காலத்தின் மனித சமூக வளர்ச்சி நிலை குறித்து அறியப்படுகிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்தை 4 பிரிவுகளாக வகைப்படுகின்றனர்.
- பழைய கற்காலம் (Paleolithic) - 5,00,000 BCE
- இடை (அ) நுண்கற்காலம் (Meso or Microlithic) 10,000 - 4,000 BCE
- புதிய கற்காலம் (Neolithic) 4000 - 1000 BCE
- பெருங்கற்காலம் & இரும்பு காலம் (Megalithic & Iron Age) 1000 to 500 BCE
மனிதன் மொழியைக் கற்று, எழுதத் தொடங்கியதற்குப் பிறகு உள்ள காலகட்டம் வரலாற்றுக்காலம் என்று அழைக்கப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் மூலம் கடந்த கால நிகழ்வுகளை துல்லியமாகப் பதிவு செய்ய முடிந்த காலம் வரலாற்றுக் காலம் என்பர். இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் பயணக் குறிப்புகள் ஆகியவை இக்காலத்தை அறிய உதவும் முக்கிய எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் ஆகும். வரலாற்றுக் காலத்தை 4 பிரிவுகளாக வகைப்படுகின்றனர்.
- துவக்க வரலாற்றுக் காலம் (Early Historic Period) - 300 BCE to 500 CE
- இடை வரலாற்றுக் காலம் (Medieval Period) - 900 CE to 1400 CE
- புதிய வரலாற்றுக் காலம் (Modern Period) - 1400 CE to 1900 CE
- சமகாலம் (Contemporary History) from 1945 CE
மேற்சொன்ன கால வரையரை, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் வெளியிட்ட 'Excavation in Tamilnadu - An Archaeological Report' நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பொருநையாற்றங்கரையில் (தாமிரபரணி) அமைந்துள்ள சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு குறைந்தது கி.மு. 3345 (அதாவது இன்றைய காலகட்டத்திலிருந்து 5,300 ஆண்டுகளுக்கு முன்பு) வாக்கில் தொடங்கிவிட்டதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளன. தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பொறித்த பானை ஓடுகள், கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என காலவரையரை செய்யப்பட்டுள்ளது. இதன்வழி கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் அல்லது அதற்கு முன்னரே தமிழ்நாட்டின் வரலாற்று காலம் துவங்குகிறது என சொல்லலாம்.
மேற்சொன்ன காலவரையரை பகுப்பில் தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் & இரும்புகாலம் கிமு 3345 ஆண்டுக்கு முற்பட்டதாகவும் மற்றும் துவக்க வரலாற்றுக் காலத்தை கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகவும் நாம் கொண்டு செல்ல முடியும். எனவே தமிழ்நாட்டின் இரும்பு காலமும், துவக்க வரலாற்றுக் காலமும் (சங்க காலம்) மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
வரலாற்று காலத்திற்கு முந்தியச் சுவடுகள்:
தொல்லியல் ஆர்வலர்கள் திரு. பிரேம்குமார் மற்றும் பேராசிரியர் திரு. சந்தானம் ஆகியோர் அடங்கிய குழு, ஜக்கம்மாள் கரடு மலையை சுற்றி மேற்பரப்பு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் சுந்தராஜபுரம் ஊர் மற்றும் இவ்வூரினை ஒட்டியுள்ள சஞ்சீவி மலை என்றும் இந்திரன் மலை என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் பகுதிகளில் நுண்கற்கால, பெருங்கற்கால மற்றும் வரலாற்றுக்காலச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சஞ்சீவி மலை அடிவாரக் கன்னிமார் கோயில் பகுதியில் சாமியார் புடவு என அழைக்கப்படும் புடவின் முன்பகுதியில் நுண்கற்காலப் கருவிகள், செதில்கள், மூலக்கற்கள் கிடைக்கின்றன. இவ்விடம் நுண்கற்கால கருவிகள் செய்யும் தொழிற்கூடமாக இருந்திருக்கலாம். வேலப்பர் கோயிலில் தொடங்கி சம்புலிப்புத்தூர் கண்மாய் வரை நாகலாறு என்ற ஓடை உள்ளது. இங்கு கிடைக்கும் கற்கருவிகள் குவார்ட்சைட், பளிங்கு மற்றும் செர்ட் வகைக் கற்களால் ஆனவை. கூர்முனைக்கருவிகள், அறுப்பான், பிறைச்சந்திரன் வடிவங்களில் இங்கு கிடைக்கின்றன. பாறை ஓவியங்கள் காணப்படும் புடவின் உட்பகுதியில் நீர்த் தேங்கி இருக்கும் சுனை அருகில் கருவிகளை தேய்த்து மெருகூட்டிய தடங்கள் உள்ளன. மலையின் மேல் பகுதியில் உள்ள சமதளப் பகுதியில் பத்து ஈமச் சின்னங்கள் தெற்கிலும் வடக்கிலும் பலகைக்கல் ஊன்றியவாறு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதைவிடத்திற்கு தெற்கில் இந்திரன் சிலை இருக்கக்கூடிய சிகரத்தை அடுத்துள்ள சிறிய அளவிலான சமதளப்பகுதியில் குத்துக்கற்களும் மலையின் கிழக்குப்பகுதியில் 5 குத்துக்கற்களும் காணப்படுகின்றன. மேலும், இம்மலையின் அடிவாரப்பகுதியில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கருப்பு-சிவப்பு மட்கல ஓடுகள், இரும்பு உருக்கும் போது பயன்படுத்தப்பட்ட சுடுமண் ஊதுலையின் உடைந்த பகுதிகள், இரும்பு உருக்குகள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், சுடுமண் வளையம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இம்மலையின் மேற்குப்புற தாழ்வான பகுதியில் இருக்கும் கதிர்வேல் புடவில் பொ.ஆ.8, 9ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த 107 செ.மீ உயர யட்சன் யட்சியுடன் கூடிய அழகிய மகாவீரர் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது.
(இரா. சந்தனம், மதுரை; அ. பிரேம்குமார், நிலக்கோட்டை; ஆண்டிப்பட்டி - சஞ்சீவி மலைத் தொல்லியல், ஆவணம் 32, 2021, பக்கம் 228 - 230)
பாறை ஓவியங்கள்:
ஜக்கம்மாள் கரடு மலையின் வடக்குத் திசையில் சிவலிங்கம்பட்டி கன்னிமார் கோயிலை கடந்து சென்றால் 120 அடி உயரத்தில் மலைமீது தொல்குடி மக்கள் வாழிட குகை ஒன்று காணப்படுகிறது. பத்து மீட்டர் அகலம், நான்கு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம் உள்ள அப்புடவில் காவி நிறத்தில் விலங்கொன்றின் உருவமும், நின்றநிலையில் மனிதர்களின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாறை ஓவியங்களுக்கு அறிவியல்பூர்வமான காலகணிப்பு ஏதும் செய்யப்படவில்லை. ஓவிய முறையைக் கொண்டே காலம் தோராயமாக கணிக்கப்படுகிறது. அவ்வகையில் ஜக்கம்மாள் கரடு வெள்ளைநிற குகை ஓவியங்கள் பெருங்கற்காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குகை ஓவியங்கள் காணப்படும் புடவை சாமியார் புடவு என்றும் மக்கள் அழைப்பதாக தொல்லியல் ஆய்வாளர் பாலா பாரதி தன் நூலில் குறிப்பிடுகிறார். இப்புடவை பளியன் புடவு என்று சிவலிங்கம்பட்டி மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். பளியன் புடவில் காணப்படும் ஓவியங்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது.
| ஜக்கம்மாள் கரடு, பளியன் புடவு |
| ஜக்கம்மாள் கரடு, பளியன் புடவு |
| பளியன் புடவு வெண்சாந்து பாறை ஓவியங்கள் |
| பளியன் புடவு வெண்சாந்து பாறை ஓவியங்கள் |
| பாறை ஒவியங்கள் காணப்படும் ஜக்கம்மாள் கரடு, பளியன் புடவு |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு பாறை ஓவியங்களை காண மலையேற்றம் |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு வெள்ளைநிற பாறை ஓவியங்கள் |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு வெள்ளைநிற பாறை ஓவியங்கள் |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு வெள்ளைநிற பாறை ஓவியங்கள் |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு வெள்ளைநிற பாறை ஓவியங்கள் |
பாறை ஓவியங்கள் காணப்படும் வண்டியூர் கண்ணன் மலை பக்குப்புடவில்
|
வரலாற்றுக் காலச் சுவடுகள்:
ஜக்கம்மாள் கரடு மலையின் மேற்கு திசையில் மலையேறி சென்றால் 40 அடி உயரத்தில் மலைமீது ஒரு புடவு காணப்படுகிறது. அப்புடவில் கிபி 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பம் காணப்படுகிறது. சிங்கங்கள் உள்ள பீடத்தில் மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீது மறுகாலை மடித்து அமர்வது) யோகமுத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஓளி வீசும் பிரபா வளையமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் போன்றவை காட்டப்பட்டுள்ளது. சிற்பத்தின் உச்சிப்பகுதி சிதைந்துள்ளது.
இப்புடவு சமணப் பள்ளியாகவும் திகழ்ந்தது என்பதற்கு சான்றாக இதன் தரைத்தளத்தில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டு இருந்தன. அண்மையில் இக்கற்படுக்கைகளை சிதைத்துவிட்டனர் என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ் தெரிவித்தார். சமணத் தீர்த்தங்கரை 'சஞ்சீவி சாமி' என்றும், 'முனி' என்றும் சுந்தராஜபுரம் மக்கள் அழைக்கின்றனர். அறுவடை காலங்களில் தீர்த்தங்கருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். சுந்தராஜபுரம் ஊரைச் சேர்ந்த தமிழ்வாசகன் என்பவர் இங்குள்ள சமணத் தீர்த்தங்கர் சிற்பத்தையும், பாறை ஒவியங்களையும் கண்டறிந்து கூறியுள்ளார்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஜக்கம்மாள் கரடு அழநாடு மற்றும் வரிசைநாடு ஆகிய நாட்டு பிரிவுகளின் கீழ் இருந்திருக்கலாம் என கருதலாம்.
| ஜக்கம்மாள் கரடு மலையில் உள்ள மகாவீரர் சிற்பம் |
| வரலாற்றுத்துறை பேராசிரியர் சி. மாணிக்கராஜ் அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு சிற்ப அமைதியை விளக்குகிறார் |
| மகாவீரர் சிற்பம் அமைந்துள்ள புடவை நோக்கி மலையேற்றம் |
| ஜக்கம்மாள் கரடு மலையின் தொல்லியல் சின்னங்கள் குறித்து எடுத்துரைக்கும் வரலாற்றுத்துறை பேரா. சி. மாணிக்கராஜ் |
| ஜக்கம்மாள் கரடு மலையின் முன்பு குழுப் புகைப்படம் |
ஜக்கம்மாள் கரடு மலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தென்மேற்குதிசையில் ஜக்கம்மாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபாட்டில் இருக்கும் தெய்வம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நடுகல் அமைப்பாக இருக்கலாம் என ஊர் மக்கள் சொல்வதைக் கொண்டு ஊகிக்க முடிகிறது. வழிபாடற்ற நேரம் கோயில் பூட்டியே இருக்கிறது. இத்தெய்வத்தின் பெயரைக் கொண்டே ஜக்கம்மாள் கரடு என இம்மலை அழைக்கப்படுகிறது.
| ஜக்கம்மாள் கோயில், சுந்தராஜபுரம் |
மலையின் தென்கிழக்கு திசையில் 200 மீட்டர் தொலைவில் புஞ்சைக் காட்டில் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் வீரன் ஒருவனின் நடுகல் காணப்படுகிறது. வீரனின் அருகே ஒரு மனித உருவம் காட்டப்பட்டுள்ளது. மண்ணில் புதையுண்டு இருப்பதால் முழுமையாக அறிய முடியவில்லை. இந்த இரண்டு நடுகற்களின் காலம் சுமார் 400 முதல் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.
| மண்ணில் புதையுண்டு கிடக்கும் நடுகல் |
| மண்ணில் புதையுண்டு கிடக்கும் நடுகல் |
| நடுகல்லை பார்வையிடும் குழுவினர் |
ஆண்டிபட்டியில் இருந்து ஜக்கம்மாள் கரடு வரும் வழியில் இராஜதானி என்னும் ஊரில் உள்ள அம்மன் கோயிலில் கிபி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்த முதலாம் முத்து வீரப்ப நாயக்கரின் (கி.பி.1609-1623) ஆட்சிக் காலத்தில், தமிழ் மாதம் வைகாசி 15ஆம் நாள் துன்மதி வருடம் அதாவது கி.பி.1621-ல் நாயக்கர் புண்ணியமாக கண்டமனூர் பாளையக்காரருக்கு, நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலங்களிலிருந்து கிடைக்கும் சகல ஆதாயங்களை அனுபவித்துக் கொள்ள தானமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி இக்கல்வெட்டில் வெட்டப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டில் கண்டமனூர் பாளையக்காரர் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதைப்போல் எந்தந்ந நிலங்கள் என்ற விபரமும் குறிப்பிடவில்லை. திருமிகு இரா.பிறையா, பேரா சீ.இராஜகோபால் ஆகியோர் இக்கல்வெட்டை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படுத்தினர்கள். (ஆவணம் 33/2022, பக் 72-73)
வழிபாட்டில் உள்ள தெய்வங்கள்:
ஜக்கம்மாள் கரடு மலையின் உச்சியில் இந்திரன் சிலை வைக்கப்பட்டு மக்களால் வழிபாடு செய்யப்படுகிறது. சுதை சிற்பமாக செய்யப்பட்டுள்ள இந்திரன் தன்னுடைய வாகனமான ஐராவதம் யானையின் மேல் அமர்ந்துள்ளார். இரண்டு கரங்களில் வச்சிராயுதத்தையும் கதையும் கொண்டுள்ளார். இந்திரன் சிலை, தீர்த்தங்கர் அருகே புடவில் இருந்ததாகவும், கடந்த 2019-20 ஆண்டில் மலையுச்சியில் வைக்கப்பட்டதாகவும் சுந்தராஜபுரம் ஊர் மக்கள் தெரிவித்தனர். இங்கே ஆண்டுக்கொருமுறை இந்திரன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பரவலாக வழக்கொழிந்த போன இந்திரன் வழிபாடு இப்பகுதியில் நீடித்திருப்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
| மலையுச்சியில் வைக்கப்பட்டுள்ள இந்திரன் சிலை |
| ஐராவதம் என்னும் யானையின் மீது வஜ்ராயுதம் மற்றும் கதையுடன் காட்சி தரும் இந்திரன் |
தொல்காப்பியம் மருத திணை உழுதொழில் செய்வோரின் தெய்வமாக வேந்தன் (இந்திரனை) குறிப்பிடுகிறது. புறநானூற்றில் (182) ஒரு பாடலிலும், பரிபாடலில் இந்திரன் குறித்த செய்திகள் காணப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் இந்திர வழிபாடு பற்றிப் போதிய செய்திகள் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் “இந்திர விழவூர் எடுத்த காதை''யில் இந்திரவிழா பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. ஆயினும் சிலப்பதிகாரத்தின் இந்திரவிழா, அரசரும், வணிகரும் நடத்திய விழாவேயன்றி மருதநில உழவர்களுக்கு அவ்விழாவின் பங்கு இல்லை' என்பது தெளிவு. எனவே சிலம்பின் காலத்திலேயே உழுதொழில் செய்வோர் இந்திர வழிபாட்டினின்றும் நீங்கிவிட்டனர் என்றறியலாம். இந்திர வழிபாடு இன்று தமிழ்நாட்டில் முழுவதுமாக மறைந்துவிட்டது என்கிறார் தொ.பரமசிவன் (அழகர் கோயில் நூல், பக் 102)
ஜக்கம்மாள் கரட்டின் வடக்குத்திசை மலையொட்டிய அடிவாரத்தில் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது.
| சிவலிங்கம்பட்டி கன்னிமார் கோயில், ஜக்கம்மாள் கரடு அடிவாரம் |
| சிவலிங்கம்பட்டி கன்னிமார் கோயில், ஜக்கம்மாள் கரடு அடிவாரம் |
சூழலியல் நோக்கில் ஜக்கம்மாள் கரடு
நாகலாறு:
வேலப்பர் கோயில் - பாலக்கோம்பை மலைத் தொடரில் இருந்து நாகலாறு உற்பத்தியாகிறது. சுமார் 22 கிமீ பாய்ந்து வைகையாற்றில் கலக்கிறது. வைகையாற்றின் துணையாறான நாகலாறு பழையக்கோட்டை, ஜக்கம்மாள்பட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, நீராறுபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, சண்முகசுந்தரபுரம், ஜம்புலிப்புத்தூர், ஸ்ரீரெங்கபுரம் ஆகிய ஊர்களை கடந்து வைகையாற்றில் கலக்கிறது நாகலாற்றின் நீர்பிடிப்பு பகுதியாக ஜக்கம்மாள் கரடு விளங்குகிறது.
ஆண்டிபட்டி செல்லம்மாள் கல்வியியல் கல்லூரிக்கும், தேனி நெடுஞ்சாலை ஆற்றுப்பாலத்திற்கும் இடைப்பட்ட நாகலாற்றின் மையப் பகுதியில் காணப்படும் பாறையில் செக்கு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அச்செக்கில் கிபி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தென்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்தை சேர்ந்த குடியான் தேவடி செய்வித்த செக்கு என்று பொருள் கொள்ளும் வகையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டு ஆய்வு மையத்தைச் சேர்ந்த திரு. ரா. உதயக்குமார் இக்கல்வெட்டை 2022 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியுள்ளார். (ஆவணம் இதழ் எண் 33/2022, பக் 17)
நாகலாற்றின் நடுவில் உள்ள கிபி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை செக்கு
|
தாவரங்கள்:
ஆவாரை (Senna auriculata), உசிலை (Albizia amara), உதியம் (Lannea coromandelica), கல் அத்தி (Ficus mollis), கரும்பூலா (Phyllanthus reticulatus), கருவேலம் (Vachellia nilotica), கரிக்கட்டான் (Ziziphus glabrata), திருகுகள்ளி (Euphorbia lacei), குருந்தம் (Atalantia monophylla), குறிச்சி (Maerua apetala), சூரை இலந்தை (Ziziphus oenoplia), பேய்மிரட்டி (அ) பெருந்தும்பை (Anisomeles malabarica), மஞ்சணத்தி (Morinda tinctoria), சீமைகருவேலம் (Prosopis juliflora), மா (Mangifera indica), வாழை (Musa acuminate), வெப்பாலை (Wrightia tinctoria), உடை வேலம் (Vachellia planifrons), வெள்வேலம் (Vachellia leucophloea), வெண்பூலா (Flueggea leucopyrus), வேம்பு (Azadirachta indica) உள்ளிட்ட மரம் மற்றும் புதர் வகை மரங்கள் காணப்பட்டன.
| ஜக்கம்மாள் கரடு மலையின் தாவரங்கள் குறித்து எடுத்துரைக்கும் தாவரவியல் ஆய்வாளர் கார்த்திகேயன் |
வேளாண்மை:
செம்மண் பூமியாக இருக்கும் இப்பகுதியின் முக்கிய பயிராக பருத்தி பயிரிடப்படுகிறது. ஜக்கம்பட்டி பகுதி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுக்கு மிகவும் பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் தரமான பருத்தி ஆடைகள் (ஜக்கம்பட்டி கைத்தறி சேலைகள்) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மானாவரி பயிர்கள், வெங்காயம், மிளகாய், தென்னை, வாழை உள்ளிட்ட வேளாண்மை இப்பகுதியில் பார்க்க முடிந்தது.
ஊர்வன உயிரினங்கள்:
உடும்பு, பாறைப்பல்லி, விசிறி தொண்டை ஓணான், பச்சோந்தி, சாரை, நாகம், கொம்பேறி மூக்கன், பச்சை பாம்பு உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் ஜக்கம்மாள் கரட்டை வாழிடமாக கொண்டுள்ளது.
பறவைகள்:
காலை 7.30 மணி முதல் 10 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 40 வகை பறவைகள் ஜக்கம்மாள் மலையில் ஆவணம் செய்யப்பட்டது. அவை மயில் (Pavo cristatus), கவுதார் (Ortygornis pondicerianus), மாடப்புறா (Columba livia), புள்ளிப்புறா (Spilopelia chinensis), தவிட்டு புறா (Spilopelia senegalensis), செண்பகம் (Centropus sinensis), குயில் (Eudynamys scolopaceus), அக்கா குயில் (Hierococcyx varius) நாட்டு உழவரான் (Apus affinis), அரிவாள் மூக்கன் (Threskiornis melanocephalus), தேன் பருந்து (Pernis ptilorhynchus), இராஜாளி பருந்து (Aquila fasciata), வல்லூறு (achyspiza badia), கூகை ஆந்தை (Tyto alba), கொம்பன் ஆந்தை (Bubo bengalensis), புள்ளி ஆந்தை (Athene brama), கொண்டலாத்தி (Upupa epops), செம்மார்பு குக்குறுவான் (Psilopogon haemacephalus), பச்சைக் குக்குறுவான் (Psilopogon zeylanicus), பச்சை பஞ்சுருட்டான் (Merops orientalis), வெண்தொண்டை மீன்கொத்தி (Halcyon smyrnensis), பனங்காடை (Coracias benghalensis), பொன்முதுகு மரங்கொத்தி (Dinopium benghalense), பச்சைக் கிளி (Psittacula krameri), கரிச்சான் (Dicrurus macrocercus), வால் காக்கை (Dendrocitta vagabunda), காக்கை (Corvus splendens), அண்டங்காக்கை (Corvus macrorhynchos), தையல் சிட்டு (Orthotomus sutorius), சாம்பல் கதிர்குருவி (Prinia socialis), பாறை தகைவிலான் (Ptyonoprogne concolor), சாம்பல் தகைவிலான் (Artamus fuscus), செம்பிட்டத் தகைவிலான் (Cecropis daurica), வெண்புருவ கொண்டைக்குருவி (Pycnonotus luteolus), செங்குத கொண்டைக்குருவி (Pycnonotus cafer), வெண்தலை சிலம்பன் (Argya affinis), கருங்கொண்டை நாகணவாய் (Sturnia pagodarum), நாகணவாய் (Acridotheres tristis), கருஞ்சிட்டு (Copsychus fulicatus), வெளிர் அலகு பூங்கொத்தி (Dicaeum erythrorhynchos), ஊதாபிட்ட தேன்சிட்டு (Leptocoma zeylonica) ஊதா தேன்சிட்டு (Cinnyris asiaticus), சிட்டுக் குருவி (Passer domesticus) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பறவை வகைகள் மருத்துவர் பத்ரி நாரயணன், மருத்துவர் ஹீமேக்ளோபின் ஆகியோரால் ஆவணம் செய்யப்பட்டது.
https://ebird.org/checklist/S353700997
https://ebird.org/checklist/S353702311
| மருத்துவர் பத்ரி நாரயணன் ஜக்கம்மாள் கரடு மலையில் காணப்படும் பறவைகள் குறித்து எடுத்துரைக்கிறார் |
| ஜக்கம்மாள் கரடு மலையை சுற்றித் திரியும் இராஜாளி பருந்து |
| ஜக்கம்மாள் மலையின் அடிவாரத்தில் பொன்முதுகு மரங்கொத்தி |
- சி.மாணிக்கராஜ், 2025; தேனி மாவட்ட கல்வெட்டுகள்; பாண்டியநாட்டு பண்பாட்டு மையம் வெளியீடு
- பாலா பாரதி, 2024; பாறை ஒவியங்களைத் தேடி தொகுதி 1; காக்கைக் கூடு வெளியீடு
- அ. உமர் பாரூக், 2020, அழநாடு, டிஸ்கவரி புக் பேலஸ்
- ஆவணம் இதழ் எண் 33/2022, தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வெளியீடு 2023
- S.S. Jawahar IAS, 2011, Excavation in Tamilnadu - An Archaeological Report, Goverment Museum, Chennai
- Keeladi - An Urban Settlement of Sangam Age on the banks of River Vaigai, 2019, Department of Archaeology
- Porunai - River Civilization, 2021, Department of Archaeology
- கேசவன், தவம், மரு. ஹிமோக்ளோபின், சியான் பாண்டி, தமிழ்தாசன்
- திருமிகு ச. கவிதா, சு.நாகதேவி, து.புவனேஸ்வரி, லோகேஷ்குமார், ச. லட்சுமி, உதயா, பிரேம்
- தமிழ்தாசன்
| சிவலிங்கம்பட்டி ஊர் மந்தையில் பாலூட்டி வகை விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி |
| சிவலிங்கம்பட்டி ஊர் மந்தை |
| வண்டியூர் கண்ணன் மலை பக்கப்புடவு அருகே குழுப் புகைப்படம் |
Comments
Post a Comment