மீனாட்சிபுரம் கண்மாய் - பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகள் சரணாலயம்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், அம்மாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கண்மாய். ஒரே நேரத்தில் சுமார் 2000 எண்ணிக்கையிலான பறவைகளுக்கு இக்கண்மாயில் வாழ்வாதாரமாக திகழ்கிறது. சேறல் - வரலாறு மற்றும் சூழலியல் ஆய்வு நடுவம் சார்பாக 02.08.2026, ஞாயிறு அன்று காலை மீனாட்சிபுரம் கண்மாயில் பறவைகள் பார்த்தல் நிகழ்வு நடைப்பெற்றது. பறவையியல் ஆர்வலர்கள், தேசிய மாணவர் படை (NCC), ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி - பசுமை செயற்பாட்டாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊர் மக்கள் என சுமார் 50 பேர் இந்நிகழ்வில் பங்கேடுத்தனர்.
பறவையியல் ஆய்வாளர் திரு. ந. இரவீந்திரன் அவர்கள் கண்மாயில் காணப்படும் பறவைகள், அதன் வகையினங்கள், இயல்பு உள்ளிட்டவற்றை பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். வரலாற்றுத்துறை பேராசிரியர் திரு. சி. மாணிக்கராஜ் அவர்கள் மீனாட்சிபுரம் ஊரின் வரலாற்று செய்திகளை பகிர்ந்துக் கொண்டார். சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் மீனாட்சிபுரம் கண்மாயின் பல்லுயிரியச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியதுவம் குறித்து பேசினார்.
சிறிய நீர்காகம், பெரிய நீர்காகம், உள்ளான், நெடுங்கால் உள்ளான், சங்குவளை நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, நத்தைக் கொத்தி நாரை, கரண்டிவாயன், வழுவாங்கி, அன்றில், கருந்தலை அன்றில், செந்தலை அன்றில், கூழைக்கடா, புள்ளி மூக்கு வாத்து, பெரிய கொக்கு, நடுத்தரக் கொக்கு, சிறிய நீர்கொக்கு, உன்னிக் கொக்கு, முக்குளிப்பான், நீர்க்கோழி, நாமக்கோழி, தாழைக் கோழி, சிறிய மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி உள்ளிட்ட சுமார் 63 வகையான பறவையினங்கள் மீனாட்சிபுரம் கண்மாயில் ஆவணம் செய்தோம். மீனாட்சிபுரம் கண்மாயில் 80க்கும் மேற்பட்ட பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன (As per ebird data)
கரண்டிவாயன் (VU), கூழைக்கடா (NT), கருந்தலை அன்றில் (NT), வழுவாங்கி (NT), பனங்காடை (NT) உள்ளிட்ட 5 பறவையினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செம்பட்டியல் (Redlist) உயிரினங்கள் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தரவுகள் கூறுகின்றன. அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உயிரினங்களின் வாழிவிடத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எண்ணிக்கை அடிப்ப்டையில் 400க்கும் மேற்பட்ட சிறிய நீர்காகம், 200க்கும் மேற்பட்ட அன்றில், 50க்கும் மேற்பட்ட கரண்டிவாயன் பறவைகள் மீனாட்சிபுரம் கண்மாயில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பறவையியல் ஆய்வாளர் திரு.ந. இரவீந்திரன் தலைமையிலான சேறல் ஆய்வுக் குழு ஒரு மணி நேரத்தில் 63 வகை பறவைகளை மீனாட்சிபுரம் கண்மாயில் ஆவணம் செய்தது. எனில் ஒவ்வொரு பருவக் காலத்திலும் ஆய்வு செய்தால் 150க்கும் மேற்பட்ட பறவைகயினங்களை மீனாட்சிபுரம் கண்மாயில் அடையாளம் காணலாம்.
அம்மாபட்டி வருவாய் கிராமத்தில் புல எண் 220இல் உள்ள மீனாட்சிபுரம் கண்மாய் சுமார் 206 ஏக்கர் பரப்பளவுக் கொண்டது. இக்கண்மாய் கொட்டக்குடி ஆற்றின் மூலம் பாசனம் பெறுகிறது. குரங்கணி, கொட்டக்குடி, போடி, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய ஊர்களின் திட மற்றும் திரவக் கழிவுகள் கொட்டகுடி ஆற்றின் கிளை கால்வாய் மூலம் மீனாட்சிபுரம் கண்மாய்க்கு வந்து சேருகிறது. மீனாட்சிபுரம் கண்மாயின் நீரும் சூழலும் மாசடைவதால் அக்கண்மாயை நம்பியிருக்கும் வேளாண் பயிர்களும், பல்லுயிர்களும், மனித வாழ்வும் பாதிப்படைகின்றன. சுற்றியுள்ள ஊர்களின் திட, திரவ கழிவுகளை முறையாக சுத்திகரிக்கும் அமைப்புக்கள் நிறுவப் பட வேண்டும். குப்பைகளை, நெகிழிகளை கண்மாய்குள் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது சுற்றுவட்டார மக்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் (Birds Sanctuary) அல்லது சமூக பல்லுயிரிய தளமாக (Community Reserve) அறிவித்து பாதுகாக்க வேண்டிய நீர்நிலைகளில் முதன்மையானது மீனாட்சிபுரம் கண்மாய். கண்மாய்க்குள் இருந்த நாட்டு கருவேல மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மராமத்து பணியின் போது அகற்றப்பட்டது. அதனால் கண்மாய்க்குள் இருக்கும் மரங்களில் கூடமைத்து, இனப்பெருக்கம் செய்து வந்த பறவைகள் ஊருக்குள் இருக்கும் மரங்களிலும் இடம் பெயர்ந்தன. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்மாய் தூர்வாரி, அம்மணலைக் கொண்டு கண்மாயின் கொள்ளவு பாதிக்காத வண்ணம் ஒரு மணல் திட்டு அமைத்து நாட்டு கருவேலம், இச்சி உள்ளிட்ட மரங்கள் வளர்க்க வேண்டும். கண்மாயில் காணப்படும் பறவைகள் குறித்த முக்கிய தகவல்களை ஒரிரு இடங்களில் அறிவிப்பு பலகையாக கரையோரம் வைக்க வேண்டும். நீர்நிலைசார் பல்லுயிர்ச் சூழல் குறித்து தேனி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியும் வண்னம் மீனாட்சிபுரம் கண்மாய்க்கு அழைத்து வரப்பட வேண்டும். இந்நடவடிக்கை பல்லுயிரிய சூழல் குறித்த விழிப்புணர்வுக்கும், பாதுகாப்பிற்கும் வலு சேர்க்கும்.
அரிய வகை உள்நாட்டு பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகளின் வாழிடமாகவும், தங்குமிடமாகவும் விளங்கும் மீனாட்சிபுரம் கண்மாய் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி (Section 36C of the Wild Life (Protection) Act, 1972) சமூக பல்லுயிரிய தளமாக (Community Reserve) அறிவித்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இந்த முயற்சிகள் மீனாட்சிபுரம் கண்மாய் பல்லுயிரியச் சூழல் பாதுகாப்பிற்கு உதவுவதோடு நில்லாமல், சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும். பறவைகளை பார்க்க வரும் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதனால் உள்ளூர் சார்ந்த பொருளாதாரம் வளரும்.
மேற்குத்தொடர் மலைகள் சூழ்ந்த பள்ளதாக்கில், சுருளியாறு, கொட்டக்குடியாறு, வராக நதி, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகள் பாயும் பல்லுயிரிய பெருக்கம் நிறைந்த தேனி மாவட்டத்தில் முதல் பறவைகள் சரணாலயமாக மீனாட்சிபுரம் கண்மாய் அமையும் என்ற நம்பிக்கையோடு பறவைகள் பார்த்தல் நிகழ்வை நிறைவு செய்தோம்.
Birds Checklist of Meenatchipuram Lake: https://ebird.org/checklist/S379404111
சேறல் - வரலாறு மற்றும் சூழலியல் ஆய்வு நடுவம்
03.08.2026
Meenatchipuram Lake - A potential site for Birds sanctuary
Comments
Post a Comment